விசேட செய்திகள்

இலங்கை வெற்றிக்கனவு பலிக்குமா இன்னும் 277 ஓட்டங்கள் தேவை: இன்று கடைசி நாள் ஆட்டம் !

இலங்கை அணிக்கு 453 ஓட்டங்களை வெற்றி இலக்காக மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்த நிலையில், கடைசி நாளில் இலங்கையின் வெற்றிக்கு 277 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கியது.
மேற்கிந்திய தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணி தரப்பில் ஷேன் டோவ்ரிச் 125 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுகளையும், லக்மல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 185 ஓட்டங்களுக்கு சுருண்டது. அணித்தலைவர் சண்டிமல் 44 ஓட்டங்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 
அந்த அணியில் அதிகபட்சமாக கேரன் பாவெல் 88 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம், இலங்கை அணிக்கு 453 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன் பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 94 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். கடைசி நாளான இன்று இலங்கைக்கு வெற்றி பெற மேலும் 277 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

No comments